×

டாஸ்மாக் கடை திறப்பு உத்தரவை திரும்ப பெற்று பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்பு உத்தரவை திரும்ப பெற்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): டாஸ்மாக் கடைகள் மூலம் வருகிற ரூ.36 ஆயிரம் கோடி வருமானத்திற்காக லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தி தமிழ் சமுதாயத்தின் மனிதவளத்தை காப்பாற்ற வேண்டும். விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மக்களும் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள். இதனை பொன்னான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால்  மக்களுக்கும், நாட்டிற்கும் நல்லது ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே வருகிற மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருக்க வேண்டும். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்): மதுபான வியாபாரத்தை மட்டுமே அரசின் முக்கிய வருவாய் ஆதாரமாகக் கருதுவது வெட்கக் கேடானது. அதிமுக அரசு கடந்த 17 ஆண்டுகளாக மதுபான வியாபாரத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான ‘மதுக்குடியர்களை’ உருவாக்கி மனித வளத்தை உருக்குலைத்து வருகிறது. ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): மதுக்கடைகளை திறப்பதால் உடல்நலன் கெடும் என்பது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்படும். மேலும் மது குடிக்காமல் இருந்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு மீண்டும் மது குடிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்.முருகன் (தமிழக பாஜ தலைவர்): கோயில்களில் அன்னதானத்தை தொடர்ந்திருந்தால் வரவேற்று இருக்கலாம். தரிசனத்துக்கு தடை விதித்தபோது அன்னதானத்திற்கும் தடைவிதித்த அரசு இன்னும் அன்னதானத்துக்கு அனுமதியளிக்கவில்லை. ஆனால் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும் மதுவுக்கு அனுமதி அளித்திருக்கிறது. உணவா, மதுவா என்ற கேள்விக்கு மது என பதில் அளித்திருக்கிறது தமிழக அரசு. டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடிவிட்டு இப்பொழுது முதலே மாற்று வருமானத்துக்கு வழி தேடலாம்.
டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): மதுக்கடைகளின் மூலமாக தமிழகத்து ஏழை எளிய மக்களிடமிருந்து அவர்கள் உழைத்த பணத்தை உறிஞ்சுவதால் தினசரி 90 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு குறைந்தது முப்பது ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வருகிறது. கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் பழனிசாமி அரசு, இந்த வருமானத்திற்காக எதிர்கால சந்ததிகளை அழிக்கும் வகையில் மது அரக்கனை மீண்டும் உலவவிட துடிப்பது மிக மோசமான வரலாற்றுப் பிழையாகிவிடும்.

சரத்குமார் (சமக தலைவர்): டாஸ்மாக் கடை திறக்கும் அரசின் முடிவால், தமிழகத்தில் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது. ஒரு இடத்தில் இருந்து கொரோனா பரவுகிறது என்று தெரியும் போது, அந்த இடத்திற்கு அரசு சீல் வைக்கிறது. ஆனால் டாஸ்மாக்கில் மது வாங்கி செல்வோரில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் எவ்வாறு கண்டறிய முடியும்.  தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்): தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு, சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும், அது சாத்தியமா.

இவையாவும் நிலைமையை மோசமடைய செய்து, முழு தமிழகத்தை சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும். எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும். நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி தலைவர்): கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுவாடை இல்லாமல் மதுவை மறக்கும் பயிற்சியை மது பிரியர்கள் பெற்றுள்ள வாய்ப்பை பயன்படுத்தி, மதுவிலக்கை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது.


Tags : Tamil Nadu Government Task Shop Opening Order , Task Shop, Poor Liquor, Tamilnadu Government, Leaders
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...